போதை இல்லா உலகம் கட்டுரை
முன்னுரை
உலக நாகரிகம் வளர வளர மனித வாழ்க்கை முறைகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. நாகரிகம் வளர்ச்சி பாதையில் செல்கின்ற அதே தருணத்தில் சில தீய பழக்கங்கள் வலிமை பெற்றுச் செல்கின்றது.
அதில் முக்கியமான ஒன்று தான் போதைப் பாவனை. உலகம் முழுவதும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து சமூக ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது.
மது, போதைவஸ்து, சிகரட் பாவனை போன்ற தீய பழக்கங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயர் வலிமை பெற்றுள்ளமை வேதனைக்குரியதாகும்.
போதைப் பொருட்கள் என்பவை
உடல், உளப் பாதிப்புக்களை ஏற்படுத்துவதும், சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதுமான போதைக்காக நுகரப்படும் அல்லது உடலினுள் செலுத்தப்படும் பொருட்கள் போதைப் பொருட்கள் எனப்படும்.
உதாரணமாக அபின், கஞ்சா, ஹெரோயின், சாராயம், சிகரட், பீடி, கசிப்பு, சுருட்டு போன்றவற்றைக் கூறலாம்.
போதைப் பொருளும் சமுதாயமும்
சமுதாயத்தில் மாணவர்களும், படித்தவர்களும் நிரம்பி இருக்கிறார்கள். இத்தகைய நல்ல சமூகத்துக்குச் சவாலாக இருக்கும் போதைப்பொருள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் சவாலாக உள்ளது.
போதைப்பொருளுக்கு அதிக அளவில் இளைஞர்கள் இரையாவதன் மூலம் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. போதைப் பழக்கம் சமூகத்தின் சாபக்கேடாக மாறிவருகிறது.
போதைப் பாவனையால் ஏற்படும் சமுதாய பிரச்சனைகள் போதைக்கு அடிமையாகிவிட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது, பிறரை துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
போதை என்னும் ஆயுதம்
ஒரு தேசத்தை அல்லது ஓர் சமுதாயத்தை அல்லது தனிநபரை திட்டமிட்டு நசுக்கிவிட ஏவப்படுகின்ற ஆயுதமே போதைப் பொருளாகும்.
போதை எனும் ஆயுதம் மனித வாழ்க்கையை மட்டுமல்லாது தனிமனித கௌரவம், அந்தஸ்து, பணம் போன்றவற்றை அழிப்பது மட்டுமல்லாது உயிரையும் காவு கொள்கின்றது.
எனவே இதனை ஒவ்வொரு மனிதர்களும் உணர்ந்து தமது உள்ளத்தில் நற்சிந்தனைகளை வளர்த்து தீய வழிகளில் செல்லாமலும் போதைப் பாவனை தொடர்பாக விழிப்புடனும் இருத்தல் வேண்டும்.
போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்
சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் போன்ற பாரிய நோய்களும் ஏற்படுகின்றது.
சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
கல்லீரல், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது.
முடிவுரை
உலக அளவில் போதைப் பொருட்களின் தாக்கமும் அதனால் சமூகம் அடையும் பின்னடைவும், சீர்கேடும், சிதைவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.
போதைக்குள் செல்லாமல் இருப்பதே ஒரு மனிதன் செய்யும் மிகச் சிறந்த செயல் எனலாம். போதைப் பாவனையை ஒழிப்போம். போதையில்லா உலகை உருவாக்கப் பங்களிப்புச் செய்வோம்!


He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment